கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த சிப்பி (32) என்பவர், தனது ஊருக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவர் செல்ல வேண்டிய ரயில் நடைமேடையிலிருந்து நகரத் தொடங்கியது. பதற்றத்தில் ரயிலைப் பிடிக்க ஓடிச் சென்ற அவர், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் அவர் மீது ஏறியதால், சிப்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிப்பிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவசரப்பட்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றதால் நேர்ந்த இந்த விபத்து, ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
