ஈரானின் ஜான்ஜன் மாகாணத்தில் போரின் போது வெடிக்காமல் எஞ்சியிருந்த குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளால் வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களைத் தேடிச் செயலிழக்கச் செய்யும் பணியில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் 14 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரானது பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஏப்ரல் 8 அன்று முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பு சந்தித்த மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது.
ஈரான் தரப்பு தகவல்களின்படி, போர் முடிந்த பின்னரும் நிலத்தில் புதைந்துள்ள வெடிக்காத குண்டுகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இதுவரை சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டறியப்பட்டு வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எதிர்பாராத விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
