ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி ஹரி என்ற பெண், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் இணைந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். ஆறாம் வகுப்போடு படிப்பை கைவிட்ட இவரை, பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் விஜய் ஊக்கப்படுத்தித் தேர்வு எழுத வைத்துள்ளார். தற்போது வெளியான முடிவுகளில் தாய் 360 மதிப்பெண்களும், மகன் 562 மதிப்பெண்களும் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான வெற்றியைத் தாயும் மகனும் கட்டிப்பிடித்துக் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இந்தத் தாயின் முயற்சியை ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாயுடு உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். பாதியிலேயே படிப்பை நிறுத்திய பெண்களுக்கு லட்சுமியின் இந்த வெற்றி ஒரு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. மகன் ஆசிரியராக மாறித் தாயைப் படிக்க வைத்து, இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது மனங்களையும் வென்றுள்ளது. விடாமுயற்சியும் சரியான தூண்டுதலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர்களது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
