தமிழக அரசியலில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகத் தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக – தவெக கூட்டணி அமையும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. தவெக 4 முதல் 12 இடங்கள் வரை பிடிக்கக்கூடும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில், தவெகவுடன் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சையில் ‘கிங் மேக்கராக’ உருவெடுக்க வாய்ப்புள்ள தவெகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பன்னடுக்கு அரசியல் வியூகங்களின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
