தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், ‘Axis My India’ நிறுவனம் மட்டும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 120 தொகுதிகள் வரை வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாறுபட்ட கணிப்பால் உற்சாகமடைந்த தவெக தொண்டர்கள், சமூக வலைதளங்களில் இதனைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, ‘India Today’ ஊடகமும் அதன் செய்தியாளர் அக்ஷிதா நந்தகோபாலும் தேர்தல் களம் முழுவதிலும் மக்களுடன் நின்றதாகக் கூறி, இந்த வெற்றி கணிப்பிற்கு அவர்களே காரணம் என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் பரப்பத் தொடங்கினர். ஸ்டூடியோவில் உட்கார்ந்து பேசாமல் களத்தில் இறங்கி ஆய்வு செய்ததால்தான் இத்தகைய துல்லியமான கணிப்பு கிடைத்துள்ளதாக அக்ஷிதாவை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர். இதனால் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் ‘இந்தியா டுடே’வின் அதிகாரப்பூர்வ கணிப்பு என்ற பிம்பம் இணையத்தில் உருவானது.
இருப்பினும், இந்த அதீத உற்சாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர் அக்ஷிதா நந்தகோபால் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தன்னைப் பாராட்டியமைக்கு நன்றி, ஆனால் இந்த எண்கள் இந்தியா டுடே நிறுவனத்தினுடையதோ அல்லது தனிப்பட்ட முறையில் என்னுடையதோ அல்ல; இவை அனைத்தும் ‘Axis My India’ அமைப்பு வழங்கிய தரவுகள் மட்டுமே” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஊடக நிறுவனத்திற்கும், தரவுகளைச் சேகரிக்கும் நிறுவனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.
அக்ஷிதாவின் இந்த நேரடியான பதிலைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தவெகவினரை நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். “அவசரப்பட்டு ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பிற்கு இந்தியா டுடே சாயம் பூசிட்டியே குமாரு” எனப் பலரும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருபுறம் புள்ளிவிவரப் போர் நடந்தாலும், மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் உண்மையான முடிவுகள் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
