பெங்களூரு மாகடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான தீபு (32), கடந்த ஏப்ரல் 25 அன்று மதியம் உணவு உண்ணாததால் ஏற்பட்ட கடும் பசியின் காரணமாக அருகில் இருந்த பேக்கரி ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஹனி கேக் சாப்பிட்டுவிட்டு, பனீர் டிக்கா ரோல் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டபோது, அதில் பல்லியின் வால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த அருவருப்பான காட்சியைக் கண்டவுடன் அவர் தான் சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து கடை ஊழியர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தது தீபுவை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீபு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்த பேக்கரி நிர்வாகம் மறுத்துவிட்டதோடு, தங்களுக்குத் தெரிந்த கிளினிக்கில் சிகிச்சை பெறுமாறு கூறியுள்ளனர். தற்போது கோவிந்தராஜா நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து ‘நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் கவனக்குறைவாகச் செயல்படுதல்’ (BNS) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக வீட்டுப் பல்லிகள் நேரடியாக விஷத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அவற்றின் தோலிலும் எச்சத்திலும் இருக்கும் ‘சால்மோனெல்லா’ (Salmonella) பாக்டீரியாக்கள் உயிருக்கு ஆபத்தான உணவு நச்சுத்தன்மையை (Food Poisoning) உண்டாக்கும். இதனால் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான நேரங்களில் உணவில் பல்லி இருப்பதைக் கண்டாலே ஏற்படும் அதிர்ச்சி மற்றும் பயம் காரணமாகவே மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உணவுப் பாதுகாப்புத் தரத்தை முறையாகப் பேணாத இத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
