மத்தியப் பிரதேசத்தின் ஆம்லா மற்றும் முல்தாய் இடையே தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த யுபிஎஸ்சி (UPSC) மாணவர் ஒருவருக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் (TTE) இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுப் பெட்டிக்கான டிக்கெட்டை வைத்துக்கொண்டு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏறிய அந்த மாணவர், தன்னிடம் டிக்கெட் கேட்ட டிடிஇ-யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தான் ஒரு மாணவர் என்பதைக் காரணம் காட்டி, “எந்த விதியின் கீழ் என்னிடம் டிக்கெட் கேட்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பிய விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவர் தனது கேமராவைப் பயன்படுத்தி டிடிஇ-யின் அடையாள அட்டையைக் கேட்டும், “நீங்கள் என்னைத் தொட முடியாது” என்று மிரட்டும் தொனியிலும் பேசியுள்ளார். தான் ரயிலுக்குத் தாமதமாக வந்ததால் ஏசி பெட்டியில் ஏறிவிட்டு, மெதுவாகப் பொதுப் பெட்டிக்குச் செல்ல முயன்றதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், பணியில் இருந்த அதிகாரியிடம் அவர் காட்டிய திமிர் மற்றும் டிக்கெட்டைக் காட்ட மறுத்த செயல் ஆகியவை வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த மாணவருக்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். “நீங்கள் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாகவே இருந்தாலும் டிக்கெட் கேட்கும் உரிமை டிடிஇ-க்கு உண்டு” என்றும், “விதிமீறல் செய்துவிட்டு ஒரு அரசு ஊழியரை மிரட்டுவது தவறு” என்றும் அவர்கள் சாடி வருகின்றனர். ஒருவேளை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தலையிட்டால் அந்த மாணவர் சட்ட ரீதியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் பலர் எச்சரித்து வருகின்றனர்.
