பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா (85) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் தொடர்பான எழுச்சிப் பாடல்களைப் பாடி உலகத்தமிழர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர் இவர். குறிப்பாக, தமிழீழத் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழத் தமிழர்களின் விடுதலைக் கனவை தனது பாடல்கள் வழியாகக் கடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஈழப் பாடல்கள் மட்டுமின்றி பாமக, நாம் தமிழர், தவாக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்காகவும் ஏராளமான கொள்கைப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த வைகோ, சீமான், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழுக்கும், தமிழின உணர்வுக்கும் தனது குரலால் வலுசேர்த்த ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டதாகத் தமிழ் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
