“யானைக்கு ஒரு காலம் வந்த பூனைக்கும் வருமாம்”… தமிழகத்தையே அதிரவைத்த எலுமிச்சை விலை… இணையத்தை உலுக்கும் போஸ்டர்…!

By Nanthini on சித்திரை 28, 2026

Spread the love

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தற்போதே தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, வரும் மே 4-ஆம் தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை நாடுகின்றனர். ஆனால், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை பானமான எலுமிச்சை சாறு பருகுவது, தற்போது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது.

“ஏழைகளின் ஆப்பிள்” என்று அன்போடு அழைக்கப்படும் எலுமிச்சை பழத்தின் விலை, முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை ஒரு பழம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அன்றாடம் எலுமிச்சையைப் பயன்படுத்தும் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

   

இந்த விலை உயர்விற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணியாக உற்பத்தி குறைபாடும், அதீத தேவையும் பார்க்கப்படுகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தைக்கு வரும் எலுமிச்சை மூட்டைகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த விற்பனைச் சந்தைகளில் 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரத்து சீராகும் வரை இந்த விலையேற்றம் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

   

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள எலுமிச்சை, கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) நீக்கி உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தங்கம் விலையைப் போல எலுமிச்சையின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது சாமானியர்களின் பட்ஜெட்டைப் பதம் பார்த்து வருகிறது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வழி தேடும் மக்களுக்கு, இந்த விலை உயர்வு “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போல அமைந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.