ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு… ‘லெகோ’ அனிமேஷனில் வறுத்தெடுத்த ஈரான்.. இணையத்தை அதிரவைக்கும் ‘டிஸ் டிராக்’ வீடியோ..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை இரவு விருந்து நிகழ்ச்சியில், கோல் ஆலன் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் துப்பாக்கி முழங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு அதிபர் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தத் துயரமான மற்றும் பரபரப்பான சூழலை ஈரான் நாடு தனது டிஜிட்டல் அரசியல் தாக்குதலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கிண்டல் செய்யும் வகையில், ‘லெகோ’ (Lego) பாணி அனிமேஷன் வீடியோ ஒன்றை ஈரான் தரப்பு வெளியிட்டுள்ளது. ‘டிஸ் டிராக்’ (Diss Track) எனப்படும் ராப் இசை வடிவில் அமைந்துள்ள இந்த வீடியோவில், ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போதெல்லாம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அவர் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் இடையிலான நீண்டகாலப் பிராந்தியப் போர் பதற்றம், தற்போது டிஜிட்டல் தளத்தில் ஒரு நையாண்டிப் போராக உருவெடுத்துள்ளது.

   

   

அந்த அனிமேஷன் வீடியோவின் பாடல் வரிகளில், ட்ரம்பின் ஆளுமை மிகவும் பலவீனமானது என்றும், அவரால் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் மிகக் கடுமையாகக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை அவரது ஆதரவாளர்களே உணரத் தொடங்கிவிட்டதாகக் கூறும் அந்த வீடியோ, ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ட்ரம்ப் உண்மைகளை மறைக்கலாம், ஆனால் அது ஈரானிடம் பலிக்காது என எச்சரிக்கிறது. “உண்மையில் நீங்கள் ஒரு தோல்வியாளரே” என நேரடியாகச் சாடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.