“என் மகனே எழுந்து வா”.. பனைமரம் ஏறிய 16 வயது சிறுவன் துடிதுடிக்க மரணம்… கதறும் உறவினர்கள்… தென்காசியில் நிகழ்ந்த பயங்கரம்…!!

By Muthu Mani on சித்திரை 26, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பொன் செல்வன், பனை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு வெளியே உள்ள பனை மரங்களில் கிளிகளைப் பிடிப்பதற்காக பொன் செல்வன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மரத்தில் ஏறியபோது, அந்த மரம் காய்ந்த நிலையில் இருந்ததால் திடீரென முறிந்து விழுந்தது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் மீது முறிந்த பனை மரமும் விழுந்ததில், அவன் உடல் நசுங்கி படுகாயமடைந்தான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அவனது நண்பர்களும் அங்கிருந்தவர்களும் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

   

சிறுவனின் மறைவு குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. துள்ளித் திரிந்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெஞ்சை உருக்கச் செய்தது. இந்தத் துயரச் சம்பவத்தால் மயிலப்பபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.