சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவர் பணியாற்றி வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடையில் மேலாளராக இருந்த சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
சம்பவத்தன்று இரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்குச் சென்று அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு சத்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த சத்யாவின் 10 வயது மகன் கிஷாந்த், சக்திவேலை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறுவன் கிஷாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தன் மகனைக் காப்பாற்ற முயன்ற சத்யாவையும் சக்திவேல் கொடூரமாகத் தாக்கியதில், சத்யாவின் வலது கை மணிக்கட்டு துண்டானது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி சத்யா தனது தந்தை வீட்டிற்கு ஓடி வந்து உதவி கோரியுள்ளார். உறவினர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் கிஷாந்த் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தான். உடனடியாக இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த சக்திவேல், அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆசைக்கும் கோபத்திற்கும் இடையில் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனதுடன், குற்றவாளியும் தற்கொலை செய்துகொண்ட இந்த துயரச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
