“உங்களுக்குத் தைரியம் இருந்தா போன் பண்ணுங்க!”… ஈரானுக்கு செக் வைத்த டிரம்ப்… ஒற்றை பதிவால் அலறும் உலக நாடுகள் …!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட அமைதி முயற்சிகளுக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருந்த தனது பிரதிநிதிகள் குழுவின் பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். சுமார் 18 மணி நேரம் பயணம் செய்து அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தையை விட அமெரிக்காவிற்கே அதிக ஆதிக்கம் (Leverage) இருப்பதாகவும் அவர் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்திருந்த ஈரான் அதிகாரிகள், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியைச் சந்தித்த பின்னர் நாடு திரும்பினர். இந்த நிலையில், டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழுவின் இஸ்லாமாபாத் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது மேற்காசியப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட முயற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

   

தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானியத் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும், யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், “எங்களிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளன, அவர்கள் பேச விரும்பினால் எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளட்டும்; பயனில்லாத பயணங்களுக்காக நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இது ஈரானை ராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

   

இருப்பினும், இந்தப் பயண ரத்து என்பது ஈரான் மீதான உடனடித் தாக்குதலுக்கான அறிகுறி அல்ல என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். மீண்டும் தாக்குதலைத் தொடங்குவது குறித்து தாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளதால், போர் அபாயம் தற்காலிகமாகத் தள்ளிப்போயுள்ளது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து கொண்டு வந்த இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.