“அது மட்டும் நடந்தா நாங்கதான் வின்னர்..” கொடைக்கானல் மலைக்கு ஸ்டாலின் போனது ஏன்?… வைரலாகும் ராசி’ மேட்டர்…!!!

By Muthu Mani on சித்திரை 25, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது ஓய்வெடுப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்குச் சேகரித்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் எனத் தொடர் பணிகளால் ஏற்பட்ட களைப்பைப் போக்க அவர் இந்தச் சுற்றுலாவைத் திட்டமிட்டுள்ளார். மதுரையிலிருந்து கார் மூலம் மலைப் பிரதேசமான கொடைக்கானலுக்குச் சென்ற அவர், அங்கு வரும் 28-ஆம் தேதி வரை தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் களத்தில் இந்தப் பயணம் வெறும் ஓய்வாகப் பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான “வெற்றி செண்டிமெண்ட்” இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய சில தேர்தல்களின் போதும், வாக்குப்பதிவு முடிந்த கையோடு ஸ்டாலின் கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார். அந்தத் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததால், அதே ராசி இப்போதும் தொடரும் என்ற நம்பிக்கையில் அவர் மீண்டும் கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

   

இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் அதே வேளையில், தேர்தலுக்குப் பிந்தைய நிலவரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனைகளையும் அவர் அங்கிருந்தபடியே மேற்கொள்வார் எனத் தெரிகிறது. ஒருபுறம் கடுமையான உழைப்பிற்குப் பின் தேவைப்படும் உடல்ரீதியான ஓய்வு, மறுபுறம் வெற்றியை உறுதிப்படுத்தும் பழைய ராசி என இரு காரணங்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் தற்போது “மலைகளின் இளவரசி”யான கொடைக்கானலில் முகாமிட்டுள்ளார்.