கொலை முயற்சி வழக்கை முடிக்க 2 லட்சம் டீல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்… போலீஸுக்கே தண்ணி காட்டிய போலி டிரைவர்… ஹரியானாவில் சிக்கிய பலே திருடன்…!!!

By Muthu Mani on சித்திரை 24, 2026

Spread the love

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், நீதிபதியின் ஓட்டுநர் என்று பொய் கூறி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தூகா கிராமத்தைச் சேர்ந்த இக்பால் என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இம்ரான் என்ற நபர், தான் ஃபரிதாபாத் அமர்வு நீதிபதியின் ஓட்டுநர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். வழக்கிலிருந்து கடுமையான பிரிவுகளை நீக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இக்பாலிடம் அவர் நம்பிக்கையைத் தூண்டியுள்ளார்.

வழக்கில் உள்ள 307-வது பிரிவை (கொலை முயற்சி) ரத்து செய்யவும், குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு கட்டணம் என்ற பெயரில் 1,80,000 ரூபாயை இம்ரான் பெற்றுள்ளார். ஆனால், பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இக்பால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, இம்ரான் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தப் பணப் பரிமாற்றத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட நியாஸ் முகமது என்பவர், ஒரு பகுதியை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையைத் தராமல் ஏமாற்றப் பார்த்துள்ளார்.

   

பாதிக்கப்பட்ட இக்பால் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இம்ரான் ஒரு போலி நபர் என்பதும், அரசுப் பணியில் இருப்பதாகக் கூறி மோசடி செய்ததும் உறுதியானது. இதனையடுத்து நூஹ் சதர் காவல்துறையினர் இம்ரானைக் கைது செய்தனர். இந்த மோசடிச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.