“நைட்டி போட்டது ஒரு குத்தமா?” – மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்… கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், ஆடை விவகாரத்திற்காக மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவன் எரிக்க முயன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கானாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட நந்தகட் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணாஜி பரசுராம் பாட்டீல் (29) என்பவருக்கும், மஞ்சுளா (27) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களது இல்லற வாழ்க்கை ஆரம்பம் முதலே சுமூகமாக அமையவில்லை என்றும், மஞ்சுளா தனது கணவரால் தொடர்ந்து உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை வீட்டின் ஆடை அணிவது தொடர்பாக தம்பதியிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. மஞ்சுளா புடவைக்கு பதிலாக ‘நைட்டி’ அணிந்திருந்ததைக் கண்ட கிருஷ்ணாஜி, கடும் ஆத்திரமடைந்து அவரிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

தற்போது மஞ்சுளா 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகளின் நிலையை கண்டு கதறிய மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நந்தகட் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தாக்குதலுக்குப் பிறகு தலைமறைவான கிருஷ்ணாஜியைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

   

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நந்தகட் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த கிருஷ்ணாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சாதாரண ஆடை விஷயத்திற்காக ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்கத் துணிந்த இந்தச் சம்பவம், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.