தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல; தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியைத் தக்கவைப்பாரா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அரியணை ஏறுவாரா அல்லது அரசியல் களத்தில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய் ‘ஹீரோ’வாக உருவெடுப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், சீமானின் பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பலன் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், இந்த முக்கியத் தலைவர்களின் இன்றைய ராசிபலன்கள் பெரும் கவனம் பெற்றுள்ளன.
திமுக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார். சிம்ம ராசியைச் சேர்ந்த இவருக்கு இன்று வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பூரம் நட்சத்திரக்காரரான இவருக்குக் குடும்பக் குழப்பங்கள் நீங்கி, எடுத்த வேலைகள் தடையின்றி நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் களத்தில் அவருக்கு ஒரு சாதகமான மனநிலையை வழங்கக்கூடும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மண்ணான எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். மீனம் ராசியைச் சேர்ந்த இவருக்குப் பொதுவாழ்வில் புகழ் கூடும் நாளாக இன்று அமைந்துள்ளது. நண்பர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு உதவும் என ராசிபலன் கூறினாலும், ரேவதி நட்சத்திரக்காரரான இவருக்குத் தொழிலில் சில எதிர்பாராத நெருக்கடிகளும், வேலை நிமித்தமாகத் திடீர் பயணங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பணிச் சுமையைக் குறிப்பதாக அமைகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடக ராசியைச் சேர்ந்த இவருக்குச் சமுதாயப் பணியில் ஆர்வம் கூடும் என்றும், ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து முடிக்கும் நாளாகவும் இன்று அமையும். குறிப்பாகப் பூச நட்சத்திரக்காரரான இவருக்குப் பணியிடப் பிரச்சினைகள் விலகி, பொருளாதார நிலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்ப ராசியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்றைய நாளில் இவர் மிகுந்த தைரியத்தோடு செயல்படுவார் என்றும், வருமானம் திருப்தி தருவதோடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கிரக நிலைகளின்படி ஒவ்வொரு தலைவருக்கும் ஒருவிதமான சாதக பாதகங்கள் இருந்தாலும், தமிழக மக்களின் இறுதித் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையப்போகிறது என்பது வாக்குப்பெட்டியில் பதிவாகத் தொடங்கியுள்ளது.
