சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் விவகாரம் தொடர்பாகத் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். காவல்துறையினர் அனுமதி அளித்த நேரத்திற்குள்ளாகவே தான் கரூரில் இருந்ததாகவும், விதிமுறைகளை மீறவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். “கொஞ்சம் கூட வாய் கூசாமல் என் மீது பழியைப் போடுகிறீர்கள்; உங்களுக்கு மனசாட்சி இல்லையா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், தன் மீதான விமர்சனங்கள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் பழிகள் என்று சாடினார்.
மேலும், கரூரில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அங்கிருந்த பொதுமக்களிடமே கேட்டால் அவர்கள் உண்மையைச் சொல்வார்கள் என்று விஜய் குறிப்பிட்டார். மக்கள் முன்னிலையில் உண்மையை மறைக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தன் மீது வீண்பழி சுமத்துவதை எதிர்த்துக் கொந்தளித்துப் பேசினார். இந்தப் பேச்சு அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
