மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற அதிரடியான தேர்தல் பரப்புரைப் பாடலை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் நிலவும் எழுச்சியையும், மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “வெல்லும் படை இது விலகிடு விலகிடு” என்ற வரிகளுடன் சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைப் பகிர்ந்துள்ள கமல், இது தமிழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் “திராவிட சங்கநாதம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சிறப்புப் பாடலைப் கமல்ஹாசனே தனது கணீரென்ற குரலில் ஆவேசமாகப் பாடியுள்ளார். பாடலின் காட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கம்பீரமாகப் பறக்கின்றன. குறிப்பாக, சேலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கமல்ஹாசன் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தின் காட்சிகள் பாடலில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பறை இசை முழங்கத் தொடங்கும் இந்தப் பாடல், திராவிட இயக்கத்தின் வலிமையையும், இந்திய நாட்டின் பாதுகாப்பிற்குத் திராவிடப் படை எப்போதும் துணை நிற்கும் என்பதையும் உரக்கச் சொல்கிறது.
பாடலின் வரிகள் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தேவைகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. “உழவை ஒதுக்கி திரவியம் தேட முற்படுபவர்களுக்குத் தடையாக நிற்போம்” என்றும், அதே வேளையில் “தொழிற்சாலைகள் மற்றும் சாலைகள் அமைக்கும் முன்னேற்றத்தை வரவேற்போம்” என்றும் சமநிலையான வளர்ச்சியைப் பாடல் வலியுறுத்துகிறது. “என்றும் தமிழகம் வென்றிட வேர்விட, விதையாய், செடியாய், மரமாய், காடாய், நாடாய் உலகாய் விரிந்திட வாழ்த்துதுமே” என்ற வரிகள் மூலம் தமிழ்நாட்டின் உலகளாவிய வளர்ச்சியைத் தனது கனவாகக் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
முதலீட்டாளர்களை ஈர்த்தல், அண்டை நாடுகளை விஞ்சும் வர்த்தகம், மண்ணையும் விண்ணையும் முட்டும் தமிழ் இனம் எனப் பல்வேறு கனவுகளை உள்ளடக்கி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. “இன்றும் நமதே, நாளை நமதே” என்ற முழக்கத்துடன், திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல், தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் இந்தத் தீவிரமான பரப்புரை முயற்சி, தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
