மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்துப் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜக வேட்பாளர் சுந்தர் சியை கடுமையாக விமர்சித்தார். “மதுரை மக்களுக்காக எவ்விதப் போராட்டமும் செய்யாமல், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் இருந்துவிட்டு இப்போது ஓட்டுக் கேட்க வந்துள்ளீர்களா?” எனச் சாடினார். மேலும், 10 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் உங்கள் மனைவி குஷ்புவுக்குக் கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடியாக, பிடிஆர் தரப்பினர் குஷ்பு மற்றும் சுந்தர் சியை ‘சினிமா கூத்தாடிகள்’ என விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த குஷ்பு, பிரகாஷ் ராஜ் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றவர் எனச் சாடினார். “எங்களைச் சினிமா கூத்தாடிகள் எனச் சொல்லும் பிடிஆருக்காக இப்போது பிரசாரம் செய்வது அதே சினிமாவில் இருக்கும் சத்யராஜும், பிரகாஷ் ராஜும் தானே?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல என்றும், ரகுபதி, சேகர்பாபு போன்ற மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களே அங்கு அதிகம் உள்ளனர் என்றும் குஷ்பு காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
