மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் நடந்த அடுத்தடுத்த கோர விபத்துகளில் ஒரு இளம் வழக்கறிஞர் மற்றும் நான்கு சிறுவர்கள் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மண்டலேஷ்வர் பகுதியில் ஸ்கூட்டரில் வீடு திரும்பிய ஸ்வஸ்திக் என்ற வழக்கறிஞர், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார். ஐந்து சகோதரிகளின் ஒரே தம்பியான அவரை படிக்க வைக்க சகோதரிகள் பலர் தங்கள் திருமணத்தையே தியாகம் செய்த நிலையில், அவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கில் சகோதரிகளே பாடையைத் சுமந்து சென்ற காட்சி காண்போர் கண்களைக் குளமாக்கியது.
மற்றொரு விபத்தில், திருமண வைபவம் முடிந்து வீடு திரும்பிய மூன்று சிறுவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூவருமே உயிரிழந்தனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் மீது வாகனம் மோதியதில் அவர்களின் 3 வயது மகன் சம்பவ இடத்திலேயே பலியானான். விபத்தில் சிக்கிய பெற்றோர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய வாகன ஓட்டுநர்களைக் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட நிதியுதவி வழங்கியுள்ளது.
