ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக விளங்கிய அயதுல்லா அலி காமெனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஒரு மாத கால தீவிர யுத்தத்தின் முதல் நாளிலேயே 86 வயதான காமெனி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய மரபுப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும், அவரது உடல் தற்போது வரை ரகசிய இடத்திலேயே வைக்கப்பட்டிருப்பது ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இஸ்ரேலின் நேரடித் தாக்குதலுக்கு அஞ்சியே காமெனியின் இறுதிச் சடங்குகளை நடத்துவதில் ஈரான் அரசு தயக்கம் காட்டி வருகிறது. காமெனி போன்ற ஒரு முக்கியத் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அந்த கூட்டத்தையே இலக்காக வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்த ஈரான் அதிகார வர்க்கமே சரிந்துவிடும் என்ற அச்சம் அந்நாட்டு அதிகாரிகளிடம் நிலவுகிறது. இதனால், எவ்வித ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத ஈரான், தனது பலவீனத்தை மறைக்கவே உடலை ரகசியமாக வைத்துள்ளது.
மறுபுறம், ஈரானிய மக்கள் மத்தியில் எழும் கிளர்ச்சியும் அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 1989-ல் முதல் உச்ச தலைவர் ருஹோல்லா கொமேனி மறைந்தபோது நிலவிய மக்கள் எழுச்சி, தற்போது அலி காமெனிக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை மக்கள் அஞ்சலி செலுத்தத் திரளாமல் போனால் அது ஆட்சியின் செல்வாக்கைப் பாதிக்கும் என்பதாலும், ஒருவேளை திரண்டால் அது அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக மாறக்கூடும் என்பதாலும் ஈரான் அரசு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், காலக்கெடுவுக்குள் காமெனியின் உடலை அடக்கம் செய்ய வேண்டிய நெருக்கடியில் அந்நாட்டு அரசு உள்ளது. காமெனியின் சொந்த ஊரான ‘மஷாத்’ நகரில் பலத்த பாதுகாப்புடன் அல்லது ரகசியமாக அவரை அடக்கம் செய்யத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் உச்ச தலைவரின் உடலை வாரக்கணக்கில் அடக்கம் செய்ய முடியாத நிலை, ஈரானின் அதிகார பலம் எவ்வளவு சரிந்து போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
