கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே உள்ள சன்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது நிகழ்ந்த விபரீதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் விருந்தினர்களுக்கு சிக்கன் கறி உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவை எடுத்துக் கொண்டு, சச்சின் மட்டும் தனியாக மது அருந்துவதற்காக கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தனிமையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிக்கன் எலும்பு ஒன்று சச்சினின் தொண்டையில் சிக்கியுள்ளது. மதுபோதையில் இருந்ததால் எலும்பை வெளியேற்ற முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் அவர் கடுமையாகத் திணறியுள்ளார். அந்த நேரத்தில் கட்டிடத்தில் வேறு யாரும் இல்லாத காரணத்தால், அவருக்குத் தேவையான முதலுதவி கிடைக்கவில்லை. இதனால் மூச்சுத்திணறி அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலை கட்டிட வேலைக்காக வந்த தொழிலாளர்கள், சச்சின் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சச்சினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இளைஞரின் மரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் உணவருந்தும்போது ஏற்பட்ட இந்த அஜாக்கிரதை ஒரு இளம் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
