லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமாரோஸின் மகன் ஜோஸ் மார்ட்டின், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேட்டியளித்துள்ளார். தனது தாயாருக்கு விவசாயம் தெரியாது என்று விமர்சித்த தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்குப் பதிலடி கொடுத்த அவர், “எனது தாயார் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்; இப்போதும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்” என்று விளக்கமளித்தார். மேலும், எம்ஜிஆர் நாமம் சொல்லிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக தவெக-வில் இணைந்த கு.ப.கிருஷ்ணன், லாட்டரி தொழில் குறித்துப் பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து தவெக-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஜோஸ் மார்ட்டின், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா (மார்ட்டினின் மருமகன்) மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “ஆதவ் அர்ஜுனா இல்லையென்றால் தவெக-வே இல்லை; அக்கட்சியின் அனைத்துக் கூட்டங்களுக்கும் வெளிப்படையாக அவர்தான் செலவு செய்கிறார்” என்று குறிப்பிட்டார். பணத்திற்காக மட்டுமே அவரைத் தவெக-வில் வைத்துள்ளதாகவும், ஒரு கூட்டத்திற்கு ஆகும் செலவைக் கூட அவரிடம்தான் பெறுகிறார்கள் என்றும், அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இறுதியாக தவெக தலைவர் விஜய் குறித்தும் அவர் அதிரடியான கருத்தைத் தெரிவித்தார். “விஜய் அவர்கள் திமுகவை மேலோட்டமாக விமர்சித்தாலும், முதல்வர் அல்லது துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகளுக்குச் சென்று இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை” என்று சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய் திமுக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக அவர் சந்தேகம் எழுப்பினார். மார்ட்டின் குடும்பத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மோதல் தமிழக அரசியலில் புதுப்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
