புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரவுடி கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த லோகநாதன் (23) என்பவர், தனது நண்பர்கள் ஆறு பேருடன் திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் மது அருந்துவதற்காக அருகில் உள்ள கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, திருமயம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர்.
மது போதையில் இருந்த சதீஷ்குமார் தரப்பினர், லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் வீண் வம்பில் ஈடுபட்டுள்ளனர். ரவுடி கும்பல் அவர்களை வலுக்கட்டாயமாகத் தோப்புக்கரணம் போடச் சொல்லி வற்புறுத்தியதுடன், லோகநாதனின் செல்போனையும் பறித்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த வெட்டு காயமடைந்த லோகநாதன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை அருகில் இருந்த கண்மாயில் வீசிவிட்டு, கொலையாளிகள் காரில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார், லோகநாதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த கொலை வழக்கில் தேடப்படும் சதீஷ்குமார், கடந்த ஆண்டு தனக்கு எதிராகப் புகார் அளித்த ஜகபர்அலி என்பவரை லாரியேற்றிக் கொலை செய்த குற்றவாளியான குவாரி உரிமையாளர் ராசு என்பவரின் மகன் ஆவார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இந்த கும்பலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கோரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
