மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றங்கள் தணியத் தொடங்கியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்திலும் முதலீட்டுச் சந்தையிலும் ஒருவிதமான கலவையான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஏற்பட்ட 10 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏப்ரல் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஈரானுடனான போர்ச் சூழலைத் தணித்து, பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரம்ப்பின் அறிவிப்புகள் மீதான முழுமையான நம்பிக்கை இன்னும் முதலீட்டாளர்களிடம் ஏற்படாததால், உலக சந்தைகளில் ஒரு எச்சரிக்கையான போக்கே காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் சந்தையைப் பொறுத்தவரை, போர் நிறுத்த அறிவிப்பு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்திருந்த எண்ணெய் விலை, தற்போது 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 98.05 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 94 டாலருக்கு கீழும் சரிந்துள்ளது. ஈரான் உடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளதால், எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தையில் ஒரு சிறிய ‘டிவிஸ்ட்’ நடந்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த கவலைகள் நீடித்தாலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,796.67 டாலர் என்ற அளவில் சிறிய உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 164 ரூபாய் சரிந்து 15,502 ரூபாயாக விற்பனையாகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தையே கருதுவதால், போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்பும் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்படாமல் நிலைத்தன்மை காணப்படுகிறது.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, இந்திய மற்றும் அமெரிக்கச் சந்தைகள் ஓரளவுக்கு உயர்வுடன் காணப்படுகின்றன. சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்து 78,291 என்ற அளவை எட்டியுள்ளது; நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால் விப்ரோ போன்ற முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதால் ஐடி துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, போர் நிறுத்தம் உலகப் பொருளாதாரத்திற்கு நல்வாய்ப்புகளைத் திறந்து விட்டிருந்தாலும், நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை சந்தையில் முழுமையான எழுச்சியைப் பார்ப்பது கடினம் என்றே தோன்றுகிறது.
