திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று காந்தி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள், கடந்த பத்து ஆண்டுகளாக இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் குடிநீர் வசதி மற்றும் சமுதாயக்கூடம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
மக்களின் இந்தத் திடீர் முற்றுகையாலும் அடுக்கடுக்கான கேள்விகளாலும் திண்டுக்கல் சீனிவாசன் நிலைதடுமாறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், “என்னை பேச விடுங்கள், ஒரு கட்டுப்பாடு இல்லாமல் பேசுகிறீர்களே” எனப் பொதுமக்களிடம் கடிந்துகொண்டார். நிலைமையைச் சமாளிக்க அருகிலிருந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராஜைப் பேசச் சொன்னபோது, அவர் “கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்” எனப் பதிலளித்தார்.
இருப்பினும், “நீங்கள்தானே 10 வருஷமா எம்.எல்.ஏ-வாக இருக்கிறீங்க, இதுவரை ஏன் செய்யவில்லை?” என மக்கள் விடாமல் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “நாங்கள் இப்போது எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியிடம் கேளுங்கள்” எனப் பதிலளித்ததால் மக்கள் மேலும் கொதிப்படைந்தனர். மக்களின் தொடர் எதிர்ப்பால் பதில் சொல்ல முடியாமல் திணறிய முன்னாள் அமைச்சர், தனது பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
