லைக்ஸுக்காக வாயில்லா ஜீவனுக்கு வெடிகுண்டா..? முதலையை அலறவிட்ட ‘ரீல்ஸ்’ வெறியன்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் செய்த ஆபத்தான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சந்திரலோகி ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதலையின் மீது அந்த இளைஞர் ‘சுட்லி பாம்’ (Sutli Bomb) எனப்படும் அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசைத் தூக்கி எறிந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

அமைதியாக ஆற்றங்கரையில் வெயில் காய்ந்து கொண்டிருந்த முதலையின் அருகே அந்தப் பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் மிரண்டு போன முதலைகள் அலறியடித்துக்கொண்டு தண்ணீருக்குள் குதித்தன. அங்கு அமர்ந்திருந்த பறவைகளும் அச்சத்தில் சிதறி ஓடின. வெறும் பொழுதுபோக்கிற்காகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவும் வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்திய அந்த இளைஞரின் வக்ர புத்தியைச் சமூக ஆர்வலர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

   

 

   

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போர்க்கேடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலீஸ் நடவடிக்கைக்கு அஞ்சி அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கிவிட்டாலும், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.