நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தேர்தல் பிரசாரத்தின் போது உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தான் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனி ஆளாக நின்று கத்திக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதனைத் தனது நாட்டு மக்கள் மீது தான் வைத்துள்ள “ஒன் சைடு லவ்” (ஒருதலைக் காதல்) என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். “நான் இவ்வளவு பேசியும் என் காதலை (கொள்கையை) நீங்கள் புரிந்துகொள்ள மாட்டேன்கிறீர்களே” என்று அவர் வெளிப்படுத்திய ஆதங்கம் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய சீமான், அரசியல் களத்தில் தான் சந்திக்கும் சவால்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசுகையில், “15 வருஷமா கத்துறேன்.. என் பாவம் உங்கள சும்மா விடாது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். மற்ற அரசியல் கட்சிகள் பண பலத்துடன் வலம் வரும் நிலையில், தான் லட்சியத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்பதாகவும், தமிழக மக்கள் இன்னும் தன்னை முழுமையாகத் தழுவிக்கொள்ளவில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் சீமானின் தம்பிகள் மற்றும் ஆதரவாளர்கள், “எங்கள் அண்ணனின் உண்மையான காதலைத் தமிழகம் ஒருநாள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ளும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இது சீமானின் வழக்கமான உணர்ச்சிவசப்பட்ட அரசியல் உரைதான் என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறி வந்தாலும், அவரது இந்தப் பேச்சு தற்போதைய தேர்தல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
