உலக நாடுகள் பொருளாதார நெருக்கடி வந்த பிறகு தீர்வு தேடும் நிலையில், சீனா முன்கூட்டியே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்க அரசுப் பத்திரங்களை பெருமளவில் விற்று வரும் சீனா, அதற்கு மாற்றாக தங்கத்தைக் குவித்து வருகிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும் 300 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ள சீனா, தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தி வருகிறது. பிபிஓசி (PBoC) எனப்படும் சீனாவின் மத்திய வங்கி, சந்தையிலிருந்து ஒரு டிரில்லியன் யுவான் நிதியைத் திரும்பப் பெற்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயல்வது, வரவிருக்கும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை (Recession) எதிர்கொள்வதற்கான ஒரு தற்காப்பு அரணாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் கப்பல் போக்குவரத்துத் தடை உண்மையில் சீனாவைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. ஈரானிடமிருந்து சீனா பெற்று வந்த தடையற்ற கச்சா எண்ணெய் விநியோகத்தைத் துண்டிப்பதன் மூலம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ‘ரேர் எர்த்’ (Rare Earth) எனப்படும் அரிய உலோகங்களின் ஏற்றுமதியை சீனா தடை செய்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிப்பிற்கு அவசியமான இந்த உலோகங்கள் சீனாவின் வசம் இருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வல்லரசு நாடுகளின் மோதல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் ரெசிஷன் வருவதற்கான வாய்ப்பு 49 சதவீதம் வரை உள்ளதாக மூடீஸ் (Moody’s) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகியவையும் இந்த அபாயக் கட்டத்தில் உள்ளன. குறிப்பாக, வளைகுடா நாடுகள் 2026-ல் எதிர்மறை பொருளாதார வளர்ச்சியைச் சந்திக்கக்கூடும் என்றும், இதனால் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய இந்த நெருக்கடியில் இருந்து இந்தியாவும் தப்ப முடியாது என்பது கசப்பான உண்மையாகும். இந்தியாவின் 2026-27 நிதியாண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேசமயம், பணவீக்கம் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்ற வாய்ப்புகள் இந்திய நடுத்தர வர்க்கத்தினரைப் பெரிதும் பாதிக்கக்கூடும். வல்லரசு நாடுகளின் பொருளாதாரப் போர், ஒருபுறம் வளரும் நாடுகளின் வளர்ச்சியை முடக்கும் அதேவேளையில், உலகப் பொருளாதார வரைபடத்தையே மாற்றி அமைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
