மதுரை மேற்குத் தொகுதியில் 4-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சோலையழகுபுரம் மற்றும் எம்.கே.புரம் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, அவருக்கு ஆதரவாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தார். அப்போது மேடையில் பேசிய செல்லூர் ராஜூ, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது அண்ணாமலை சிங்கத்தைப் போலவும், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் விளங்கியதாகப் புகழ்ந்து தள்ளினார். ஒரு படி மேலே சென்று, அண்ணாமலை “தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம்” என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று கிண்டலடித்ததோடு, ஒப்பற்ற தலைவரான முத்துராமலிங்கத் தேவரை அண்ணாமலையோடு ஒப்பிடுவது தேவரை அவமதிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புனிதமான தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய செல்லூர் ராஜூவுக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது மதுரையில் ஜாதிய மற்றும் அரசியல் ரீதியான மோதலாக உருவெடுத்துள்ளது.
