நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான இந்த ஆலையில், பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு என மொத்தம் 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறைகளில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய துறையில் பொறியியல் பட்டமோ அல்லது டிப்ளமோவோ முடித்திருக்க வேண்டும்; மேலும் பட்டம் பெற்று 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் இப்பயிற்சியில், பட்டதாரி அப்ரண்டிஸ்களுக்கு மாதம் ரூ.12,300 மற்றும் டிப்ளமோ அப்ரண்டிஸ்களுக்கு மாதம் ரூ.10,900 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இந்நிலையில் எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 17, 2026-க்குள் “முதன்மை பொது மேலாளர், கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு, நீலகிரி – 643202” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
