விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, மயிலம் மற்றும் வானூர் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்குத் துணை போவதாகக் கடுமையாக விமர்சித்தார். பாஜகவைச் சுமந்து வரும் பழனிசாமியை நம்பி அதிமுக தொண்டர்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிக்க முடியாது என்று குறிப்பிட்ட திருமாவளவன், பாஜகவின் எச்.ராஜா அல்லது அண்ணாமலையைத்தான் டெல்லி தலைமை முதலமைச்சராக்கும் என்று அதிரடியாகக் கூறினார். இரட்டை இலைக்கு வாக்களிப்பது என்பது நேரடியாக மோடிக்கும் அமித்ஷாவிற்கும் வாக்களிப்பதற்குச் சமம் என்றும், அதிமுகவின் சின்னம் தற்போது பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட பாஜக துடிப்பதாகக் கூறிய அவர், அதிமுக 100 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அடுத்த 6 மாதங்களில் அக்கட்சியை உடைத்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்றார். அதிமுகவை வீழ்த்தப்போவதே பாஜகதான் என்பதை அக்கட்சித் தொண்டர்கள் உணர வேண்டும் என்று கூறிய அவர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக மதச்சார்பற்ற கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
