அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். அவருக்கு தவெகவில் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில், செங்கோட்டையனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து சுமார் 2,000 பேர் நீக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தவெகவில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர்களில் சுமார் 500 பேர் தவெகவிலிருந்து விலக முடிவெடுத்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரமணிதரன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் சென்ற முக்கிய நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இணைந்த பின் அவர்கள் கூறுகையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததே தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், இருப்பினும் அவருக்காகவே அங்கு பயணித்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து மாற்றுக் கட்சியில் பயணிக்க விரும்பாததால் விலகியதாகக் குறிப்பிட்டனர். மேலும், தாங்கள் மீண்டும் அதிமுகவில் இணையக் கூடாது என்று செங்கோட்டையன் தரப்பினர் தங்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
