“வேலியில் போன ஓணானை எடுத்த டிரம்ப்”… தங்க விலையை விட இதான் இப்ப ஹாட் டாபிக்! ஈரான் – அமெரிக்கா இடையே என்னதான் நடக்கிறது…?

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

இஸ்லாமாபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான குழுவின் பிடிவாதமான அணுகுமுறையே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஈரானை தனிமைப்படுத்த நேட்டோ நாடுகளின் உதவியை அமெரிக்கா கோரியபோது அவை பின்வாங்கியதால், வேறு வழியின்றி பாகிஸ்தான் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சம்மதித்தது. ஆனால், தொடக்கம் முதலே ஆக்கப்பூர்வமான விவாதங்களை விட, ஈரானுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே அமெரிக்கத் தரப்பு ஆர்வம் காட்டியது.

பேச்சுவார்த்தையின் முதன்மைத் தடையாக அணுசக்தி விவகாரம் உருவெடுத்தது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, அந்நாட்டின் யுரேனியச் செறிவூட்டும் கருவிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றது. இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈரானின் சொத்துக்களை, குறிப்பாக கத்தாரில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கக் குழு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இத்தகைய ஒருதலைப்பட்சமான நிலைப்பாடு பேச்சுவார்த்தையில் பெரும் தேக்கநிலையை ஏற்படுத்தியது.

   

பொருளாதார ரீதியிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, ஹார்முஸ் நீரிணைப் போக்குவரத்து மற்றும் போர் நிறுத்தக் கோரிக்கைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் உரிமையை மறுத்த அமெரிக்கா, அங்கு தடையற்ற போக்குவரத்தை மட்டுமே வலியுறுத்தியது. மேலும், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்தம் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா காதில் வாங்கிக் கொள்ளாமல், கடல்சார் பாதுகாப்பு குறித்து மட்டுமே பேசி விவாதத்தைத் திசைதிருப்பியது.

   

பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட ராஜதந்திர ரீதியிலான விரிசல், ஒட்டுமொத்த முயற்சியையும் முறியடித்தது. போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரும் வகையில் ஈரான் பிரதிநிதிகள் அணிந்து வந்த உடைகள் அமெரிக்கத் தரப்பை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை அமெரிக்கா மதிக்கத் தவறியதால், பேச்சுவார்த்தை பாதியிலேயே துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் ஒரு பொன்னான வாய்ப்பு நழுவிப்போயுள்ளது, இது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.