தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்ற ‘லீடர்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கூல் சுரேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது குறித்துப் பேசிய அவர், இந்தப் படத்திற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வளவு பெரிய கூட்டு உழைப்பைச் சிதைக்கும் வகையில் திரைப்படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தச் செயலை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த அவர், ஒரு திரைப்படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடுவது என்பது “கற்பழிப்புக்கு சமமானது” என்று ஆவேசமாகக் கூறினார். திரைத்துறையைச் சார்ந்து வாழும் பலருடைய வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தச் செயலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் இத்தகையக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். கூல் சுரேஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
