தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பரப்புரைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகள், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி திமுகவின் பிரசாரங்களுக்கு உதவி வருவதாகவும், இதற்கான வீடியோ மற்றும் மின்னஞ்சல் ஆதாரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1975-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய காரணத்திற்காகவே இந்திரா காந்தியின் பதவி பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்றதொரு சூழல் தற்போதும் நிலவுவதாகவும், தேர்தல் விதிமீறல் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
