தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார். ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், “பனை ஏறும் தொழிலாளியைப் போலிஸார் காலில் சுட்டுள்ளனர்; நானும் கள் இறக்குவேன், முடிந்தால் என்னை வந்து சுடுங்கள்” என அரசுக்கும் காவல்துறைக்கும் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். பதநீர் இறக்கும் தொழிலாளியைச் சுட்ட காவலரை இதுவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களிடையே உரையாற்றிய சீமான், சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தகுதி இல்லாதவர்களே காசு கொடுத்து ஓட்டு வாங்குவதாகக் குற்றம் சாட்டினார். “நான் சாதி, மதத்தைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை, தமிழன் என்ற இன அடையாளத்தைச் சொல்லி கேட்கிறேன். காசு இல்லாததால் நான் தொடர்ந்து தோற்கிறேன் என்று சொல்வதை விட, என்னை அங்கீகரிக்காத மக்களாகிய நீங்கள்தான் தோற்றுப் போகிறீர்கள்” என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், வாக்குக்குக் காசு கொடுக்காமல், மக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போவதாக அவர் உறுதியளித்தார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தந்தை-மகன் (சாத்தான்குளம் சம்பவம்) கொல்லப்பட்டதையும், தற்போதைய திமுக ஆட்சியில் பனை தொழிலாளி சுடப்பட்டதையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை விட்டுவிட்டு, இயற்கை உணவான கள் இறக்குபவர்களைத் தண்டிப்பதன் நோக்கம் என்னவென்று வினவினார். தான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிவிட்டு பனை, தென்னை மற்றும் ஈச்ச மரங்களில் இருந்து கள் இறக்குவதை முறைப்படுத்துவேன் என்றும், துப்பாக்கியால் சுட்டவர்களை அதே பனை மரத்தில் கட்டி வைத்துப் பச்சை மட்டையால் அடிப்பேன் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, வாரிசு அரசியல் மற்றும் திராவிட-தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். ரோடு ஷோக்கள் மற்றும் சினிமா மோகத்தில் மயங்காமல், உரிமையை நிலைநாட்டத் தன்னுடன் நிற்க வேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். “காமராஜர் கொடுத்த ஆட்சியை விடச் சிறந்த ஆட்சியை என்னால் தர முடியும்; இது உங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு, சிந்தித்து வாக்களியுங்கள்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
