ஹைதராபாத்தில் திருமணமான முதல் நாளிலேயே கணவன் மற்றும் அவரது நண்பர்களால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூறு காலத்துப் பயிர் என நம்பித் திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த அந்தப் பெண்ணிற்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய கணவனே எமனாக மாறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இந்த மனிதாபிமானமற்ற செயல், பாதிக்கப்பட்ட பெண் தற்போது அளித்த புகாரின் வாயிலாகத் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஹைதராபாத் குக்கட்பள்ளியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். அவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நெல்லூரைச் சேர்ந்த இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான மறுநாளே பேகம்பேட்டில் உள்ள கணவரின் வீட்டில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகமாக மாறியது.
திருமணக் கொண்டாட்டம் என்ற பெயரில் தனது ஐந்து நண்பர்களை வீட்டிற்கு அழைத்த கணவன், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணையும் மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மயக்கமடைந்த நிலையில், கணவன் மற்றும் அவனது நண்பர்கள் ஐவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் தாய் மற்றும் சகோதரியைக் கொன்று விடுவதாகக் கொலை மிரட்டல் விடுத்ததால், அந்தப் பெண் இத்தனை காலம் மௌனமாக வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
இறுதியாகத் தனது அச்சத்தைப் போக்கி தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்தப் பெண், நடந்த கொடுமைகளைத் தனது குடும்பத்தினரிடம் கூறி குக்கட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பேகம்பேட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கு அங்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் அவரது நண்பர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
