ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டதாக உலகளாவிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஈரான் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டது. இருப்பினும், அதே நாளில் நெதன்யாகுவின் தூண்டுதலால் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதும், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதும் அமெரிக்காவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீட்டால் தற்போது தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல் லெபனான் மீது பயங்கர தாக்குதலை நடத்தி அமைதியை குலைத்துள்ளது. ஈரான் மீது மட்டுமே தாக்குதலை நிறுத்துவதாகக் கூறிவிட்டு, லெபனான் மீது 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் அத்துமீறியுள்ளது. இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சாராம்சத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயல், மீண்டும் ஒரு முழு அளவிலான போரைத் தூண்டும் நோக்கம் கொண்டதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அமெரிக்கா ஒன்று போர்நிறுத்தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் வழியாகத் தொடரும் போரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது” என்று அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், லெபனானில் நடக்கும் படுகொலைகளை உலகம் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், பந்து இப்போது அமெரிக்காவின் கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுமா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்பது அவரது பதிவின் சுருக்கமாக உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் ஒரு பகுதி என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால், இஸ்ரேல் வேண்டுமென்றே லெபனானைத் தாக்குவதன் மூலம் மீண்டும் அமெரிக்காவை போருக்குள் தள்ள முயல்கிறது. நெதன்யாகுவின் இந்த அரசியல் வியூகத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சிக்கிக்கொள்வாரா அல்லது நிதானமாகச் செயல்பட்டு அமைதியை நிலைநாட்டுவாரா என்பதே தற்போதைய உலக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
The Iran–U.S. Ceasefire terms are clear and explicit: the U.S. must choose—ceasefire or continued war via Israel. It cannot have both.
The world sees the massacres in Lebanon. The ball is in the U.S. court, and the world is watching whether it will act on its commitments. pic.twitter.com/2bzVlHFKgi
— Seyed Abbas Araghchi (@araghchi) April 8, 2026
