பள்ளியா? மதுபானக் கடையா?… குடிபோதையில் உளறிய 4 ஆம் வகுப்பு மாணவன்… பள்ளிக்குள் 204 லிட்டர் சரக்கு பறிமுதல்… பீகாரையே அதிரவைத்த பகீர் சம்பவம்…!!!

By Muthu Mani on சித்திரை 9, 2026

Spread the love

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தப்படுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதன் கோர விளைவாக, கடந்த வாரம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் தங்கள் கண்பார்வையை இழந்தனர். இந்தச் சோகம் மறைவதற்குள், பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா அரசுப் பள்ளியில் பயன்படுத்தப்படாத கழிப்பறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வர ஒரு சிறுவனே காரணமாக இருந்துள்ளான். அந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்குத் தடுமாறியபடி குடிபோதையில் சென்றுள்ளான். மாணவனின் விசித்திரமான பேச்சைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, பள்ளிக் கழிப்பறையில் இருந்த மதுவை தான் அருந்தியதாக அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டான். போதை தலைக்கேறிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது நலமடைந்துள்ளான்.

   

பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் கழிப்பறையைச் சோதனை செய்தபோது, அங்கு 23 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மதுவிலக்கு அமலில் உள்ள ஒரு மாநிலத்தில், மாணவர்களின் கல்விக்கூடத்தையே மதுபானக் கிடங்காகப் பயன்படுத்திய சமூக விரோதிகளின் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பச்வாரா போலீசார், இந்தப் பின்னணியில் உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.