பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதன் பதிலடி கொல்கத்தா வரை இருக்கும் என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார். சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மீது பாகிஸ்தான் தனது பார்வையைத் திருப்பினால், இந்த முறை அந்த நாடு எத்தனை துண்டுகளாகச் சிதறும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று ராஜ்நாத் சிங் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், அண்டை நாடுகளின் தேவையற்ற சீண்டல்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
