ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் உயிர்ச் சேதத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டிருப்பது ஈரான் ராணுவத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ராணுவ இலக்குகளைத் தாண்டி, ஈரானின் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றாலும், பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மையக் கட்டடம் மற்றும் முக்கியமான தரவுத்தளங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளம் மற்றும் ஆன்லைன் சேவைகளும் முடங்கியுள்ளதால் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஷெரீப் பல்கலைக்கழகத் தலைவர் மசூத் தஜ்ரிஷி இது குறித்துக் கூறுகையில், இது வெறும் ராணுவத் தாக்குதல் அல்ல என்றும், ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை முடக்கும் திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரசீக மொழியில் உள்நாட்டு ஏஐ (AI) மாடல்களை உருவாக்கும் பணியில் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வளர்ச்சியைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஈரானின் முன்னேற்றத்தின் அடையாளங்களைத் தகர்க்கும் முயற்சி என அவர் சாடியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஷெரீப் பல்கலைக்கழகத்தோடு நின்றுவிடவில்லை; பாஸ்டர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஃபோட்டானிக்ஸ் ஆய்வகம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டு ஆய்வகம் என ஈரானின் அறிவுசார் மையங்கள் அனைத்தும் கடந்த வாரங்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைய ஏஐ யுகத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி யாரைச் சென்றடைய வேண்டும் என்பதை அதிகார மையங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கு இந்தத் தாக்குதல்கள் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளன. சர்வதேசத் தடைகளைத் தாண்டி ஈரான் சுயமாக வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதே ஈரானிய கல்வியாளர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டாக உள்ளது.
