ராமதாஸுக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி.. அன்புமணி காலில் விழுந்து ஐக்கியம்… விக்கிரவாண்டியில் உருவான புது ட்விஸ்ட்….!

By Nanthini on சித்திரை 6, 2026

Spread the love

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக சார்பில் விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய மாவட்டச் செயலாளர் புகழேந்தி, திடீர் திருப்பமாக இன்று சென்னையில் அன்புமணி ராமதாஸைச் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த அதிரடி மாற்றத்தால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி புகழேந்தியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், பாமகவும் ராமதாஸ் – அன்புமணி என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுத் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி அணிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு சசிகலாவின் புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தந்தை மற்றும் மகன் தரப்பு வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதால், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

   

தனது அணி வேட்பாளர்களை அன்புமணி தரப்பினர் மிரட்டுவதாக ராமதாஸ் பகிரங்கமாகச் சாட்டியுள்ளார். உண்மையான பாட்டாளிகள் தங்கள் பக்கம் இருப்பதால் ஆத்திரமடைந்த சிலர், கட்சியின் பொதுச்செயலாளருக்கே கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் அநாகரிகமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கருத்தியல் ரீதியாக மக்களைச் சந்திக்க முடியாதவர்கள், களத்தில் நிற்கும் வேட்பாளர்களையும் நிர்வாகிகளையும் ஆசை காட்டியும் மிரட்டியும் முடக்கப் பார்ப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

   

தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை தமது தரப்பு வேட்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விக்கிரவாண்டி வேட்பாளர் அணி மாறியுள்ள நிலையில், பாமகவின் உட்கட்சிப் பூசல் தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.