மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய போர் நடவடிக்கைகள் மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவிப்பதோடு, உலக அளவில் பெரும் பொருளாதார பேரழிவிற்கும் வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார். போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். தலைவர்கள் அழிவுப் பாதையைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே நீண்டகால மோதல்கள் முடிவுக்கு வரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்களைத் தவிர்த்து அமைதியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளதாகவும், காலதாமதம் செய்யாமல் தலைவர்கள் இப்போதே பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
