பாலைவன மணல் மிகவும் மென்மையானது மற்றும் சீரற்ற துகள்களைக் கொண்டது என்பதால், இதுவரை சாலை கட்டுமானங்களுக்கு அது ஏற்றதாகக் கருதப்படவில்லை. ஆனால், ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் அங்கமான ‘பாத் அஹெட்’ (PathAhead) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், ‘ரைசிங் சாண்ட்’ (Rising Sand) என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் பாலைவன மணலை வலுவான கற்களாக (Artificial Aggregate) மாற்றி, முதன்முறையாக கென்யாவில் சாலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தில், பயனற்றதாகக் கருதப்படும் மெல்லிய பாலைவன மணல் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு, அதிக கடினத்தன்மை கொண்ட செயற்கைக் கற்களாக மாற்றப்படுகின்றன. இது வழக்கமான சாலைகளை விட இரண்டு மடங்கு அதிக ஆயுட்காலம் (சுமார் 20 ஆண்டுகள்) கொண்டதாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஆறுகளில் இருந்து மணல் எடுப்பதைத் தவிர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கட்டுமானச் செலவு சுமார் 60 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்தச் சாலை கட்டுமானப் பணிக்கான சோதனை ஓட்டம் கென்யாவில் 2027-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 2028-ம் ஆண்டில் கென்யாவில் இதற்கெனத் தனி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, ஆப்பிரிக்கா முழுவதும் இந்தத் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், போக்குவரத்து வசதி குறைந்த ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்த செலவில் தரமான சாலைகளை அமைக்கப் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
