மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.பி. பி.வில்சன், தமிழகத்திற்குச் செய்யப்படும் நிதி அநீதியை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். தமிழகம் ஒரு ரூபாய் வரியாக வழங்கினால், மத்திய அரசு வெறும் 23 பைசாவை மட்டுமே திரும்பத் தருகிறது என்றும், ஆனால் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு முறையே 1.66 ரூபாய் மற்றும் 6.90 ரூபாய் வரை வாரி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நிதி ஒழுக்கம் பற்றிப் பேசும் மத்திய அரசின் கடன் கடந்த நான்கு ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ள நிலையில், நிதி மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக அவர் சாடினார்.
மேலும், நாட்டில் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பது போன்ற செயல்களால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ‘யுவசக்தி’ போன்ற முழக்கங்கள் வெறும் காகிதத்தோடு நிற்பதாகவும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை விடப் பெரும் பணக்காரர்களின் நலனுக்கே இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார். வரும் ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள தேர்தலில், தங்களைப் புறக்கணித்த மத்திய அரசுக்குத் தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
