தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தனது பிரமாணப் பத்திரத்தில், தமக்கு 624 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அசையும் சொத்துக்கள் 404 கோடி ரூபாய் என்றும், நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் 220 கோடி ரூபாய் என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவரிடம் சுமார் 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தனது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன்படி, இவரது மனைவி சங்கீதாவின் பெயரில் 15.76 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும், சங்கீதாவிடம் 3 கிலோ தங்க நகைகளும், 135 காரட் வைர நகைகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் தனது தனிப்பட்ட வருமானமாக 184.53 கோடி ரூபாயை விஜய் காட்டியுள்ள நிலையில், தமக்கு எவ்விதமான வங்கிக் கடன்களோ அல்லது பிற நிதி நிலுவைகளோ இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விஜய்யின் நிதி அறிக்கையில் அவர் தனது குடும்பத்தினருக்கு வழங்கியுள்ள கடன் விவரங்கள் பேசுபொருளாகியுள்ளன. அவர் தனது மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாயும், தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு 3.02 கோடி ரூபாயும் கடனாக வழங்கியுள்ளார். அதேபோல், தாய் ஷோபாவுக்கு 87 லட்சம் ரூபாய், மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8 லட்சம் ரூபாய் மற்றும் மகள் திவ்யா சாஷாவுக்கு 4 லட்சம் ரூபாய் எனத் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் கடன் அளித்துள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
