“இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது…” ஏப்ரல் 1 முதல் மாறும் வங்கி விதிகள்…. ஆன்லைன் மோசடிக்கு ‘செக்’…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க, வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மிகவும் கடுமையான புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளன. இனி வங்கிச் செயலிகளில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதோ அல்லது திரையைப் பதிவு செய்வதோ முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடவுச்சொல் திருடப்படுவது தவிர்க்கப்படும். மேலும், எஸ்.எம்.எஸ் மூலம் வரும் ஓ.டி.பி (OTP) முறைக்குப் பதிலாக, இனி வங்கிச் செயலிக்குள்ளேயே ரகசியக் குறியீட்டைப் பெறும் வசதி அறிமுகமாகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையில்லாத நேரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில், ஆன்லைன் பரிவர்த்தனைகளைத் தாங்களாகவே தற்காலிகமாக முடக்கி வைத்துக் கொள்ளும் புதிய வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

பெரிய தொகையான 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது, ஆதார் இணைப்பு, கைரேகை அல்லது முகத்தை ஸ்கேன் செய்யும் கூடுதல் பயோமெட்ரிக் சோதனைகள் கட்டாயமாக்கப்படுகின்றன. ஒரு நபர் திரையைக் கையாளும் வேகம் மற்றும் தட்டச்சு செய்யும் விதத்தைக் கொண்டே, அது உண்மையான வாடிக்கையாளர்தானா என்பதைச் செயலி தானாகவே கண்டறியும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் பரிவர்த்தனை நடந்தால், பாதுகாப்பு கேள்விகள் மூலம் வாடிக்கையாளரின் அடையாளம் உறுதி செய்யப்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதோடு, மோசடி ஆசாமிகளின் ஊடுருவலை முற்றிலுமாகத் தடுக்கும் என வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.