ஸ்டாலின், எடப்பாடி காரை சோதனை செய்வீர்களா..? அவங்க ஓட்டுக்கு காசு கொடுக்கலையா..? என் காரில் இருப்பதை எடுத்துக்கோங்க… பறக்கும் படையை ஓடவிட்ட சீமான்…!!

By Soundarya on பங்குனி 30, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சீமான், அதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். “வாக்காளர்களுக்குத் திமுகவும் அதிமுகவும் பணம் கொடுப்பதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா?” என்று அவர் ஆவேசமாகக் கேட்டது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

சோதனையின் போது அதிகாரிகளிடம் பேசிய சீமான், ஓட்டுக்குக் காசு கொடுப்பது குற்றம் என்றும் அதற்கு ஓராண்டு சிறை என்றும் பதாகைகளை மட்டும் வைக்கிறீர்கள், ஆனால் பணம் கொடுக்கும் ஒருவரைக் கூட உங்களால் கைது செய்ய முடியவில்லையே என்று சாடினார். ஓட்டுக்கு யாரும் காசு கொடுக்கவில்லை என்று அதிகாரிகளால் உறுதியாகச் சொல்ல முடியுமா என்றும், ஏழை மக்கள் ஆட்டுக்குட்டி வாங்கவோ அல்லது மருத்துவமனைக்கோ கொண்டு செல்லும் பணத்தைப் பறிப்பதுதான் உங்கள் சோதனையா என்றும் அவர் காட்டமாக வினவினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், தனது காரைச் சோதனை செய்வது போலவே முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கார்களையும் தைரியமாகச் சோதனை செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். சோதனையின் போது காரில் இருந்த தின்பண்டங்களைக் காட்டி, “இதையெல்லாம் பணம் என்று நினைத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என அவர் கிண்டலாகக் கூற, அங்கிருந்த அதிகாரிகள் சிரித்தனர். இறுதியில் எவ்விதப் பணமும் சிக்காத நிலையில், அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.